Thursday, August 2, 2007

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்


Nee Soon Sri Maha Mariammam

ஸ்ரீ மகா மாரியம்மன்

[ஈ சூன்]

சிங்கப்பூர்த் தீவு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்துவக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின்பார்வையில் இருந்த காலம் ‘’திரை கடலோடியும் திரவியம் தேடு’’ எனும் முதுமொழிக்கிணங்க,இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வர்த்தகம் செய்யவும், உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவும்தென்கிழக்காசிய நாடுகளில் குறிப்பாகச் சிங்கை, மலேசியாவிலும் குடியேறிய காலம்.

’கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’’ என்பது இந்துக்களின் இறைவழிபாட்டிற்குஏற்பட்ட இலக்கணம். தாய் நாட்டை விட்டு வெளி நாடு வந்தபோதிலும், இறை வழிபாட்டைமறவாத இந்துக்கள் கோவில் கட்டி, தங்கள் மதம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றை மறவாதுஒழுகி நிற்கத் துடித்த காலம், தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக்கோவில்களை அமைத்து வழிப்பட்ட காலம் கூட.
அந்த சூழ்நிலையில்தான் சுமார் 75 ஆண்டுகள் முன் அமைந்த பழைமையான [ஈ சூன்]ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். சிங்கப்பூரின் வட பகுதியிலமைந்துள்ள ஆலயம் இரண்டாம்உலகப் போருக்கு முன்பாக இங்கு வாழ்ந்த தமிழர்கள் மகா மாரியம்மைனை வழிபடும்தெய்வமாகக் கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.

எழுத்து வடிவத்தில் எந்த வரலாறும் இல்லாத நிலையில், வாய் மொழியாகக்கூறப்படும் வார்த்தைகள்தான் வரலாறு எனக்கொள்ள வேண்டும்.

மாரி எனும் சொல்லுக்கு மழை என்று பொருளாகும். நிலத்தைப் பூமாதேவி என்றும், கல்விக்குச்சரஸ்வதி என்றும், செல்வத்திற்குச் திருமகள் என்றும், மலையில் தோன்றியவள் மலைமகள்என்று அழைக்கிறோம். அதே போல் மழை தருபவள் மாரியம்மன். வெப்பமாகிய வெம்மையைத்தவிர்த்து நமக்கும் இந்த பூமிக்கும் குளிர்ச்சியைத் தருபவள் மாரியம்மன்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்பெருங்காவியம். பெருங்காவியம். அதில் இளங்கோவடிகள்மழையை வணங்கி,வாழ்த்திப் போற்றும் பாடல்:-
‘’மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்விளகுவீர் வேலி உலகிற்குஅவன் குலத்தோடு ஓங்கி பரந்து ஒழுகலான்’’
மழையைப் போற்றி வழிபடும் மரபை அதற்குரிய காரணமாகத் தன் கருணைத் தன்மையைஎன்பதை அறியலாம்.

அதுபோல் மாரியம்மனும் வழிபடுதற்குரிய தண்கருணை தன்மையுடைவளாகஇருப்பதை நாம் உணரலாம். உலகைக் காப்பற்றும் சக்தி மழைக்குண்டு. அது போன்று உலகைக்காப்பாற்றும் மாரி அம்மன் அன்னையே தாயாக, நெஞ்சை நெகிழ்துருகச் செய்யும் நீராக,உயிரினங்களை வாழவைக்கும் ஒப்பில்லா மழையாக, கருணை மழை பொழியும் காரிகையாகஇருப்பதால் தமிழர்கள் பலவடிவிலான அம்மனை இங்கு மாரியாக வழிபடுகிறார்கள்.

கோயில் வரலாறு...

சிறுகுடிலில் மரத்தினால் செய்த மாரியம்மன் சிலையைச் செம்பவாங் எஸ்டேட் தோட்டத்தொழிலாளர்கள் வழிபட்டு வந்தாக சொல்லப்படுகிறது. பிறகு அம்மனின் திருவுருவம் சுதையினால்செய்யப்பட்டுச் செம்பவாங் இரப்பர் தோட்டத்தில் ஒரு சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது. இவ்வாலயம் அப்பகுதியில் வசித்த மக்களுக்கு ஒரு முக்கிய சந்திப்பு இடமாகஅமைந்தது.

இரண்டாம் உலக போர் 1941-1945 வரை போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில்,உயிர்க்கே உத்திரவாதம் இல்லாத நிலையில் ஜப்பானியரின் கொடுமையான ஆட்சியில் ஆலயத்தைச்சரிவர பராமரிக்க இயலாமற்போனது. ஜப்பானியர் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தபோதும், முன்போல் தமிழர்கள் கூடுதலாகத் தோட்ட தொழிலாளர்கள் வரவில்லை. ஆகையால்செம்பவாங் 12-வது மைலில் இருந்து வந்த ஆலயத்தை 7-வது மைலிருந்த செம்பவாங் ஹில்ஸ்(Sembawnag Hill) எஸ்டேட்டிற்கு இடம் மாறியது என்று நம்பபடுகிறது.

ஆலயத்தைப் பராமரிப்பதில் தொடர்ந்து இடர்களும், சிரமமும் ஏற்பட்டதால், 1948- ம் ஆண்டுசில தொண்டர்களின் முயற்சியால், நீ சூன் பகுதியில் [மண்டாய் ரோடு] 10-வது மைலில் ஆலயம்அமைக்கப்பட்டது. 1950 -களில் சுதையிலான தெய்வச் சிலைகள், மகாபலிபுரத்திலிருந்துதருவிக்கப்பட்ட கருங்கல் விக்கிரங்களாக, ஸ்தாபனம் செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது.1971-ம் ஆண்டு மற்றும் ஒரு புதுப்பிப்பு பணிக்குப் பிறகு கும்பாபிஷேகம் கண்டன.
மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், கிருஷ்ணர் ஆகிய விக்கிரங்களுடன் சனீஸ்வரன்,நாகர் ஆகிய விக்கிரங்கள் ஸ்தாபனம் கண்டது. அப்போது ஆலயத்தின் கூரையில் கலசம் ஒன்றும்அமைக்கப்பட்டது.

நகர விரிவாக்கமும், நகர சீரமைப்பும் விரைவாக நிகழ்ந்ததால் 1981 - ஆண்டில் சிங்கப்பூர்அரசாங்கம் புதிய ஆலயத்திற்கான புதிய இடத்தினைத் தேர்ந்தெடுக்கும்படி கோரியது. ஆலயம்புதிய வீடமைப்புப் பேட்டை அருகில் அமைக்கவும், பொது போக்குவரத்து மூலம் எளிதில்கோயிலுக்கு வரக்கூடிய சாத்தியத்தைக் கவனம் கொள்ள வேண்டியதாகியது.

அதன்படி 1993- ஆம் ஆண்டு ஈ சூன் வீடமைப்புப் பேட்டையில் 2000 ச.மீட்டர் அளவில்30 வருட கால குத்தகைக்கு நிலம் 5 இலட்ச வெள்ளிக்கு ஒதிக்கீடு செய்தது.

1994 -ஆம் ஆண்டு தொடங்கி ஆலய கட்டுமான பணி 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,8-ம் நாள் பால ஸ்தாபன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

மாரியம்மன் கோவிலின் மூலவர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன். கருவறை, முகமண்டபம்இவைகளுடன், கருவறைக்கு மேலே இரண்டு தலங்களுடன் எண் வடிவத்தில் விமானம்அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இரண்டு தலத்திலும், பராசக்தியின் சிறப்பானஅவதாரமான சிலைகள் செய்யப்பட்டுள்ளன. பதினான்கு வடிவங்களில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.தெற்கு புறத்தில் விநாயகப் பெருமானும், வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதியும்.மாரியம்மன் சன்னதியின் தெற்குப்புறம் சரஸ்வதி, துர்க்கை, பெரியாச்சி ஆகிய மூர்த்தங்கள்உள்ளன. வடக்குப் பக்கம் கிருஷ்ணர், மகா லட்சுமி, சிவபெருமான் அருவத் திரு மேனி,வெங்கட பெருமாள் மூர்த்தங்களும், கோவிலின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள்மண்டபம் அமைந்துள்ளன.

உலக நாயகியாக விளங்கும் அம்பாள் அவதாரம் பலப்பல. அவைகள் 108 சக்தி பீடமாகபாரதம், பங்களா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த 108 அம்பாளை அங்கலட்சணங்களுடன், ஆயுத அமைப்புடன் இந்த கோவில் பிரகாரத்தில் சுதை வடிவில் அமைந்துள்ளது.இந்த சுதை வடிவிலான 108 அம்பாள் வடிவங்கள் சிங்கப்பூரின் மற்ற ஆலயங்களில் காண கிடைக்காதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

விழாக்கள்.....

கொடி மரத்துடன் தங்க முலாம் பூசிய 108 கலசம் ஆலயத்தை அலங்கரிக்கிறது.ஆடிமாதம் அம்மனுக்குரிய மாதமாகையால் இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.மற்ற விழாக்களான நவராத்திரி, சிவராத்திரி, தமிழ் வருடபிறப்பு, பிரதேஷம், திருவிளக்கு பூஜை இன்னும்முக்கிய சமய திருவிழாக்கள் நடைபெறுகிறன்றன.

அம்மையே! ஆத்தாள் உண்மையே! உமையே! ஒப்பற்றவளே நீயே!அகிலம் முழுவதும் நிறைந்தே அழகினை பொழிபவளே! மாயே!இம்மை உலகில் எல்லா நலன்களும் பெற்றிடவே ஏற்றருள் இயக்கி மயக்கி எடுத்தே அணைத்து அனைத்தையும் அளிப்பவளே!

நன்மை எதுவென நானறியச் செய்தருள்வாய் என் கண்ணே!
நாடியும் பாடியும் நயந்தே உன்னடி பற்றிட செய்வாயே!
புன்மைகள் தீர்த்துப் புலன்களை அடக்கிப் பற்றிடச் செய்வாயே!பொல்லா வினையேன் என்னையே புத்தி தந்து ஆள்வாயம்மா!

Sree Maha Mariamman Temple,
251 Yishun Avenus.Singapore. 769061
Tel : 6756 6374 – 6756 1208.
Fax.6756 6084.


-சிங்கை கிருஷ்ணன்.

No comments: